இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கும் சவால்: Viagra யுக்தி கையாளப்படுமா?
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Round of 32) போட்டியில் காங்கோ குடியரசு அணிக்கு எதிராகக் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தனது அடுத்தகட்ட சவாலை எதிர்கொள்ள ஒரு விசித்திரமான உத்தியைக் கையாள்வது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
Harry Kane கடைசி நேரத்தில் அடித்த கோல்களால் இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வியிலிருந்து தப்பியது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை இரவு மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் (Azteca Stadium) நடைபெறவுள்ள அடுத்த சுற்றில், இங்கிலாந்து அணி பலத்த சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மைதானத்தில் மெக்சிகோ அணி இதுவரை இரண்டே முறை மட்டுமே தோற்றுள்ளது என்பதால், இது இங்கிலாந்துக்கு எளிதான ஒன்றாக இருக்காது.
மேலும், டீகோ மரடோனாவின் புகழ்பெற்ற ‘ஹேண்ட் ஆஃப் காட்’ (Hand of God) கோல் இந்த மைதானத்தில் தான் அடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,349 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு நிலவும் காற்றழுத்தம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு (Altitude) இங்கிலாந்து வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என அணியின் மேலாளர் தாமஸ் டூஷல் (Thomas Tuchel) கவலை தெரிவித்துள்ளார்.
“மெக்சிகோ அணி தொடக்கம் முதலே இங்கு விளையாடுவதால் அவர்கள் இந்தச் சூழலுக்குப் பழகியிருப்பார்கள். ஆனால், நமக்கு அந்தச் சூழலுக்குப் பழகுவதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.
இது நமக்கு ஒரு பெரிய பின்னடைவு தான். தூக்கமின்மை, பயணக் களைப்பு, ரசிகர்களின் சத்தம் எனப் பல தடைகள் இருக்கலாம்; இருப்பினும் எதையும் எதிர்கொள்ள எங்கள் அணி தயாராக உள்ளது” என்று டூஷல் கூறியுள்ளார்.
வகைப்படுத்தப்படாத மருந்து உத்தி Viagra
இந்த உயரமான சூழலைச் சமாளிக்கவும், வீரர்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் சீக்கிரமே சோர்வடைவதைத் தடுக்கவும் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் (FA) ஒரு விசித்திரமான வழியைக் கையாளலாம் எனப் பேசப்படுகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ‘வயாக்ரா’ (Viagra) மாத்திரைகள், நுரையீரலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உயரமான இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என மருத்துவ ரீதியாகக் கூறப்படுகிறது.
இது ஊக்கமருந்து (Doping) பட்டியலில் வராததால், இங்கிலாந்து அணி இதனைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்கலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, 2010-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையின் போதும் இங்கிலாந்து அணி இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால், அப்போது இங்கிலாந்து மருத்துவக் குழு அதனை மறுத்திருந்தது.





