FIFA வின் அடுத்த தலைவர் யார்? 54 ஆபிரிக்க நாடுகள் எடுத்துள்ள முடிவு என்ன?
ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தின் (CAF) 54 உறுப்பு நாடுகளும், FIFA தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்பான்டினிக்கு Gianni Infantino ஆதரவு வழங்குவதாக CAF தலைவர் பேட்ரிஸ் மோட்சேபே தெரிவித்துள்ளார்.
CAF இன் வருடாந்த பொதுக் கூட்டம் நைஜீரியாவின் அபுஜாவில் நடைபெற்ற நிலையில், அங்கு இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்பான்டினியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரான்ஸ் கால்பந்து நிர்வாகத் தலைவர் பிலிப் டியாலோவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
ஜப்பான் கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் கோசோ தஷிமா மற்றொரு வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த மூவரின் தேர்தல் வெற்றி குறித்து அடுத்த ஆண்டு மார்ச் 18ஆம் திகதி மொராக்கோவின் ரபாத் நகரில் அறிவிக்கப்படவுள்ளது. FIFA-வின் 211 உறுப்பு சங்கங்களில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுபவரே தலைவராகத் தெரிவாகுவார்.
தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனமான CONMEBOL, இன்பான்டினிக்கு ஒருமனதாக ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் CAF இன் ஆதரவும் வெளியாகியுள்ளது.
நான்காவது மற்றும் இறுதி தவணைக்காக FIFA தலைவர் பதவியை நாடும் இன்பான்டினிக்கு CAF தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் உலகக் கிண்ணப் போட்டிகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் FIFA Forward Enterprise (FFE) திட்டத்தை அவர் முன்வைத்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பின்னரும் இந்த ஆதரவு தொடர்கிறது.
2030 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் மொராக்கோவும் ஒன்றாகும்.
“ஆபிரிக்காவின் 54 நாடுகளின் சார்பாக, ஜியானி, நீங்கள் எங்களுடைய வேட்பாளர் என்பதற்கான ஆதரவை வழங்குகிறோம்” என மோட்சேபே தெரிவித்தார்.
“ஆபிரிக்காவின் 54 உறுப்பு சங்கங்களும் ஒருமனதாக ஜியானிக்கு ஆதரவு வழங்குகின்றன என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கை என்னிடம் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்பான்டினி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான UEFA அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.




