கடைசி ஓவர்வரை பரபரப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது T20 சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணியின் ஹரி புரூக் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். பென்டன் 22 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சௌதரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய நிகில் சௌதரி 38 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தின் வெற்றியாளராகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் டெல்லியில் பிறந்த நிகில் சௌதரி, இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடியவர். கொவிட் தொற்றுநோய் காலத்தில் பிரிஸ்பேனில் தங்கியிருந்த அவர், பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இணைந்து விளையாடத் தொடங்கினார்.
கிளப் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், மெக்சிகோ உணவகத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். தற்போது தனது நான்காவது சர்வதேச போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
இப்போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பித்த நிகில் சௌதரி, இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக அமைந்தார்.
இறுதி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜக் எட்வர்ட்ஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி செவ்வாய்க்கிழமை கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது.




