ஆஸ்திரேலியாவில் பரவும் பறவைக் காய்ச்சல் குறித்து பதற்றம் வேண்டாம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள (Hawks Nest என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் யாரும் இதனால் பீதியடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Migratory bird கடல் பறவைகளிடம் கண்டறியப்படும் இப்பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தனிப்பட்ட ஒரு சில நிகழ்வுகளா அல்லது வைரஸ் பரவலின் ஒரு பகுதியா என்பதை உறுதிப்படுத்த, துல்லியமான கண்காணிப்பும் பரிசோதனைகளும் மிகவும் அவசியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடல் பறவைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளிக்கிழமை அன்று பெர்த் நகரின் வடக்கு புறநகர்ப் பகுதியான முல்லாலுவிலும் (Mullaloo) பறவை ஒன்றிற்கு இப்பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று மிக முக்கியமானது என்றாலும், இதனால் பீதியடையத் தேவையில்லை என்று பர்னெட் இன்ஸ்டிடியூட் (Burnet Institute) அறிவியல் இயக்குனர் பேராசிரியர் ஹெய்டி டிரம்மர் (Heidi Drummer) தெரிவித்துள்ளார்.
மேலும், காட்டுப் பறவைகளிடம் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதால், இது ஆஸ்திரேலியா முழுவதும் பரவிவிட்டது என்றோ அல்லது வணிக ரீதியிலான கோழிப்பண்ணைகளுக்குள் நுழைந்துவிட்டது என்றோ அர்த்தமல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முதலாக கடந்த ஜூன் 14 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையான எஸ்பெரன்ஸ் (Esperance) பகுதியில் உள்ள ஒரு பறவையிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.





