சவுதி மீதான தாக்குதல் எதிரொலி – பாப் எல்-மண்டேப் வழியான கப்பல் போக்குவரத்து சரிவு
செங்கடல் கடற்கரையோரம் உள்ள சவூதி எண்ணெய் ஆலைகள் மீது யேமன் ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாப் எல்-மண்டேப் ( Bab el-Mandeb) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவடைந்துள்ளதாக கெப்ளர் நிறுவனத்தின் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவித்துள்ளன.
வார இறுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவாகவே இருந்தது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அப்பகுதியூடாக 11 சரக்கு கப்பல்கள் மாத்திரமே சென்றதாகவும், இது பல மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவு எனவும் அந்நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவற்றில் மூன்று செங்கடலுக்குள் நுழைந்தன. இரண்டு, கச்சா எண்ணெயை ஏற்றுவதற்காக சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளன. மூன்றாவது ரஷ்யாவுடன் தொடர்புடைய கப்பல் என்றும் தரவுகள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரானுடன் இணைந்த ஏமன் ஹுதி படைகளால் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை தாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதிகளை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியூடான கப்பல் போக்குவரத்து குறைவடைந்து மத்தியக்கிழக்கில் தொடரும் பதற்ற நிலை விரிவடைந்துள்ளது.





