இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி., பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது எனத் தெரிவுக்குழுவிடம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான முன்மொழிவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்துள்ளது. அதில் பெண்களுக்கு 25 சதவீத உத்தரவாத பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளடங்கியுள்ளது.

அதேவேளை, மற்றுமொரு சட்ட ரீதியான வழிமுறையும் நாடாளுமன்றத்தின் முன் உள்ளது. சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பியால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், அந்தச் சட்டமூலத்தை முன்னெடுத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை உருவாக்க முடியும்.

எனவே, தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை மற்றும் சட்டரீதியான தெரிவுகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முன் உள்ளன. இனிமேல் தேவையானது மேலும் செயன்முறைகளை நீடிப்பதல்ல. அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஆகும்.

தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழி விஞ்ஞாபனத்தின் 128ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின்றி இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமது பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யும் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான காலவரையறையுடன் கூடிய நடவடிக்கைகளை அரசும் தெரிவுக்குழுவும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

தெரிவுக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீவிரமான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தவறினால், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகவும் தீவிரமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

அந்தத் தீர்மானம் என்னவென்பதை இவ்வேளையில் வெளிப்படுத்த விரும்பவில்லை என்று சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை