உலகம் செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடனான ராஜதந்திர உறவை துண்டித்தது அல்ஜீரியா

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அல்ஜீரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தொடர்ச்சியான  பகைமை  நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அல்ஜீரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும், இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் அல்ஜீரியா கையாண்டு முடித்துவிட்டதாகவும் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அல்ஜீரியாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் அமைச்சிற்கு வரவழைக்கப்பட்டு, இந்தத் தீர்மானம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

பிராந்திய அரசியல் விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த முரண்பாடான நிலைப்பாடுகளால் கடந்த சில ஆண்டுகளாகவே அல்ஜீரியா – UAE இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக, இஸ்ரேலுடனான உறவை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதை அல்ஜீரியா தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அல்ஜீரியாவின் பிராந்திய போட்டியாளரான மொரோக்கோ ஆகிய நாடுகள் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ மூலம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

மேலும், மேற்கு சஹாரா விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மொரோக்கோவின் இறையாண்மைக்கு ஆதரவளித்து அங்குத் தூதரகத்தையும் அமைத்துள்ளது. ஆனால், அல்ஜீரியாவோ தனி நாடு கோரும் ‘பொலிசாரியோ முன்னணிக்கு’ (Polisario Front) ஆதரவளித்து வருகிறது.

அத்துடன், சாஹெல் (Sahel) பிராந்தியத்தில் தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொடர்ந்து, அல்ஜீரியாவிற்கும் அதன் தெற்கு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதும் இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் பிராந்திய நாடுகளைச் சீர்குலைக்க முயல்வதாக அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மத்ஜித் தெபூன் (Abdelmadjid Tebboune) ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி