லண்டனில் அமுலுக்கு வரும் சுற்றுலா வரி – சாதிக்கான் வலியுறுத்து
லண்டனில் ஹோட்டல் அறை வாடகையில் 5 சதவீதம் வரை வசூலிக்கப்படும் “சுற்றுலா வரியை” (tourist tax) விரைவாக அறிமுகப்படுத்த லார்ட் சாதிக் கான் Lord Sadiq Khan வலியுறுத்தி வருகிறார்.
இந்த புதிய வரியை அறிமுகப்படுத்துவது குறித்தும், இதன் மூலம் திரட்டப்படும் பல நூறு மில்லியன் பவுண்டுகள் நிதியை தலைநகரின் சுற்றுலாவை மேம்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் சிட்டி ஹால் (City Hall) நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாதிக் கான், லண்டனில் ‘இரவுநேர வருகையாளர் வரி’யை (Overnight Visitor Levy) அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசு வழங்குவதை நான் மனதார வரவேற்கிறேன். “இது கூடிய விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
“லண்டனின் வருகையாளர் சார்ந்த பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கதையாகத் திகழ்கிறது; இது தலைநகர் மற்றும் நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள், வணிகங்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஆதரவளிக்கிறது.
மற்ற முக்கிய உலகளாவிய நகரங்களைப் போலவே, லண்டனும் உள்ளூரிலேயே நிதியைத் திரட்டி முதலீடு செய்வதற்கான அதே நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன்,” என்றார்.
இந்த வரி விகிதம் அறை வாடகையில் அதிகபட்சம் 5 சதவீதமாக என்ற அளவில் நிர்ணயிக்கப்படும் என்று ‘தி ஸ்டாண்டர்ட்’ (The Standard) குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், வணிகத் தலைவர்கள் இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்ற பல நகரங்களை விட லண்டனில் ஹோட்டல் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், தங்குமிடச் செலவின் சதவீதமாக இல்லாமல், 2 முதல் 3 பவுண்டுகள் வரையிலான நிலையான கட்டணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.




