சீனா வடிவமைக்கும் நகல் AI தொழில்நுட்பம் – அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
மேற்கத்தேய நாடுகளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா தனது சொந்த உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள், OpenAI மற்றும் Anthropic போன்ற புகழ்பெற்ற தளங்களை பயன்படுத்தி நகல்களை உருவாக்கி வருகின்றனர்.
‘மாதிரி வடிகட்டுதல்’ (model distillation) என்று அழைக்கப்படும் இந்த முறையானது, அதிக செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதனால் வொஷிங்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை மற்றும் ரொய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் போர்க்கள நடவடிக்கைகள், கண்காணிப்பு, இணையத் திறன்கள் மற்றும் உள்ளடக்கக் கண்காணிப்பு ஆகியவற்றிற்காகப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.
அமெரிக்காவின் சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ட்ரோன்கள் மற்றும் தன்னாட்சிக் கப்பல்கள் போன்ற குறைந்த கணினித் திறன் கொண்ட சாதனங்களுக்காக ‘எளிதான’ செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி, அமெரிக்காவுடனான தனது செயற்கை நுண்ணறிவு இடைவெளியைக் குறைப்பதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.




