உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்துகிறது நேட்டோ
உக்ரைன் – போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் உரையாற்றிய மார்க் ரூட்டே,
“நேட்டோ எல்லைக்கு மிக அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விரக்தியையும், பயத்தையும் பீதியையும் விதைக்கும் அவரது எண்ணத்தையுமே காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர்வதில் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிப்பதுடன், ரஷ்யாவுடனான நேட்டோ அமைப்பின் நீண்ட கிழக்கு எல்லைப் பகுதிகளில் தற்காப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
“உக்ரைனுக்கு நாங்கள் வழங்கும் ஆதரவைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும், எங்களது ஒற்றுமையைச் சீர்குலைக்க முடியும் என்றும் புடின் நினைக்கிறார். ஆனால் அவர் தவறாகக் கணக்கிடுகிறார்” என்று நேட்டோ தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
உக்ரைன் மீது தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் மாஸ்கோ, நேட்டோவின் எதிர்வினையைச் சோதிக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரித்து வருவதையே இந்தத் தாக்குதல்கள் காட்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
போலந்து எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட இரு தாக்குதல்கள் உட்பட, எல்லைப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, உக்ரைனுடனான தனது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதாக போலந்து அறிவித்துள்ளது.





