அரசியல் மறுசீரமைப்பு: வெனிசுலாவில் முத்தரப்புப் பேச்சு
வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியின் ஒரு பிரிவினருக்கும் இடையிலான அமெரிக்க ஆதரவு பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கவுள்ளன.
நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு முன்னோடியாகப் அரசியல் அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் நிகோலஸ் மதுரோ அகற்றப்பட்டு, தற்காலிக தலைவராக டெல்சி ரோட்ரிகஸ் (Delcy Rodriguez) நியமிக்கப்பட்டதில் இருந்து, வெனிசுலா அரசியலில் வாஷிங்டனின் முன்னோடில்லாத செல்வாக்கை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத் தரப்பில், தேசிய சட்டமன்றத்தின் தலைவரும், அமெரிக்கா மற்றும் எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளில் நீண்டகால அனுபவமிக்கவருமான டெல்சி ரோட்ரிகஸின் சகோதரர் ஜார்ஜ் ரோட்ரிகஸ் தலைமையேற்பார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்காக நாட்டின் தேர்தல் சபை மற்றும் உச்ச நீதிமன்றத்தை சீரமைக்கும் முயற்சிகளின் கீழ், எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு டினோரா ஃபிகேரா (Dinorah Figuera) தலைமையேற்பார்.
2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் தேசிய சட்டமன்றக் குழுவின் தலைவராக ஃபிகேரா இருப்பதால், அவரை தலைமையேற்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி தலைவருமான மரியா கொரினா மசாடோ இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காதது சில வெனிசுலா அவதானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்குப் பிறகு தலைமறைவாக வாழ்ந்து வந்த மசாடோ, நோபல் பரிசைப் பெறுவதற்காகக் கடந்த ஆண்டின் இறுதியில் வெனிசுலாவை விட்டு வெளியேறினார்.
இருப்பினும், ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டிற்குத் திரும்பி உதவ விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் இது சரியான நேரமல்ல என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
மசாடோவை நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என்று தனது நிர்வாகம் கூறியதாக வெளியான ஊடக அறிக்கைகளை டிரம்ப் மறுத்துள்ளார்.
மதுரோ அகற்றப்பட்டதிலிருந்து வாஷிங்டனால் மசாடோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்தச் செயல்பாட்டிலிருந்து மசாடோ விலகி இருப்பது சரியானது. பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முடிந்து சுதந்திரமான தேர்தல்களுக்கு வழிவகுத்தால், அவர் வெனிசுலாவின் முதல் பெண் அதிபராவார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையான பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குத் தேவை என்ற அவரது கூற்று உறுதியாகும்” என்று பேச்சுவார்த்தை நிலவரத்தை அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் இதில் நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும், “உண்மையான முன்னேற்றத்திற்கு” தடையாக இருக்கப்போவதில்லை என்றும், ஜனநாயக நிறுவனங்கள் மீட்கப்படுதல், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தேர்தல் அட்டவணை போன்ற அம்சங்களின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்றும் மசாடோ தெரிவித்துள்ளார்.





