இந்திய எதிர்க்கட்சி தலைவர்மீது வழக்குப் பதிவு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சுமார் 300 பேர் இதில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் பேரணியாகச் சென்றனர். அகில இந்திய வானொலி நிலையம் (ஆகாஷ்வாணி) அருகில் பொலிஸார் தடுப்புகளை அமைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள், தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்புகளின் மீது ஏறி கோஷமிட்டனர். பின்னர் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை டெல்லி போலீஸார் வேனில் ஏற்றினர். எனினும், ராகுலும் பிரியங்காவும் வேனில் இருந்து இறங்கி மீண்டும் வானொலி நிலைய வளாகத்தில் நுழைந்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, 50 எம்பிக்கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களின் தர்ணா நீடித்தது. இரவு 8 மணி அளவில் டெல்லி போலீஸார் அவர்களை கைது செய்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இந்நிலையில், அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஆகாஷ்வாணி ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 10 எம்பிக்கள் மற்றும் பலர் மீது டெல்லி பொலிஸார் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராகுல் காந்தி ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் மறுத்துள்ளார்.




