உலகம் செய்தி

கருப்பின பெண்களின் உரத்த குரல் ஓய்ந்தது: நாடகாசிரியர் Bonnie Greer காலமானார்

பிரித்தானிய -அமெரிக்க எழுத்தாளரும் கலாச்சார விமர்சகருமான போனி கிரீர் (Bonnie Greer), தனது 77ஆவது வயதில் காலமானதாக அவரது கணவர் அறிவித்துள்ளார்.

பிரித்தானிய -அமெரிக்க எழுத்தாளரும் கலாச்சார விமர்சகருமான போனி கிரீர் (Bonnie Greer), தனது 77ஆவது வயதில் காலமானதாக அவரது கணவர் அறிவித்துள்ளார்.

ஆழ்ந்த துயரத்துடன் போனி கிரீரின் கணவர் டேவிட் ஹட்சின்ஸ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“புகழ்பெற்ற நாடகாசிரியர், எழுத்தாளர், விமர்சகர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகரான போனிகிரீர், தனது நுண்ணறிவு, தைரியம் மற்றும் தனித்துவமான குரல் மூலம் பிரித்தானிய கலாச்சார மற்றும் பொது வாழ்வில் நீடித்த பங்களிப்பைச் செய்துள்ளார்” என விவரித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, அவர் எனது கூட்டாளி, நம்பிக்கைக்குரிய தோழி மற்றும் உத்வேகமாகத் திகழ்ந்தார். அவருடன் எனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன்,” என்றார்.

“போனி கிரீருடன் நெருக்கமாக இருந்தவர்கள் அவரது அரவணைப்பு, நகைச்சுவை உணர்வு, தாராள மனப்பான்மை மற்றும் மக்களை ஒன்று சேர்க்கும் அவரது அசாதாரண ஆற்றலை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்,” என்றும் ஹட்சின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

1948 ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்த போனி கிரீர், இளம் வயதிலிருந்தே நாடகங்களை எழுதத் தொடங்கினார். தனது சொந்த நகரில் நாடகக் கலையைப் பயின்ற அவர், பின்னர் நியூயோர்க்கில் உள்ள ‘ஆக்டர்ஸ் ஸ்டுடியோவில்’ புகழ்பெற்ற இயக்குநர் எலியா கசானுடன் இணைந்து கல்வி கற்றார்.

1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், ‘நியூஸ்நைட் ரிவியூ’ மற்றும் ‘கொஸ்டின் டைம்’ போன்ற பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துரையாடலாளராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமானார்.

‘தி அப்சர்வர்’ பத்திரிகையால் நாட்டின் முன்னணிப் பொது அறிவுஜீவிகளில் ஒருவராகக் குறிப்பிடப்பட்ட பாணி கிரீரின் படைப்புகள்; கலாச்சாரம், இனவாதம் மற்றும் பொது நிறுவனங்கள் சார்ந்த விடயங்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.

2016 ஆம் ஆண்டு ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தைத் தொடர்ந்து ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு கருத்து தெரிவித்திருந்த போனி கிரீர், “காலையில் நான் விழித்தெழும்போது, நான் நானாகவே இருக்கிறேன்.

ஆனால் நான் வீட்டின் கதவைத் தாண்டி வெளியே வரும்போதுதான் உலகிற்கு ஒரு கருப்பினப் பெண்ணாகத் தெரிகிறேன்,” எனக் கூறியிருந்தார்.

மேலும், “கருப்பினப் பெண்களிடம் நான் எப்போதும் கூறுவது ஒன்றுதான்; ‘உங்களுக்காக நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்காதீர்கள், உங்கள் சுருள் முடியை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குரல் உரக்கக் கேட்கப்படுவதை உறுதி செய்யுங்கள்’ என்பதாகும்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய அருங்காட்சியகம் (British Museum), ரோயல் ஒபேரா ஹவுஸ் மற்றும் லண்டன்  பிலிம் ஸ்கூல் உள்ளிட்ட முன்னணி கலாச்சார நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பணியாற்றிய அவர், லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் (Chancellor) கடமையாற்றியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில், அவரது சுயசரிதை மற்றும் இசை வரலாற்றைக் கொண்ட ‘ஒபாமா மியூசிக்’ என்ற நூலும் வெளியானது.

கலைத் துறைக்கு ஆற்றிய சேவைகளுக்காக 2010 ஆம் ஆண்டு அவருக்கு ‘OBE’ (Order of the British Empire) கௌரவம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் ரோயல் சொசைட்டி ஆப் லிட்டரேச்சரின் (Royal Society of Literature) சக உறுப்பினராக (Fellow) அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி