தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கிங்ஸ்மீட்டில் நடைபெற்ற முதலாவது போட்டியில், ஐந்தாம் நாளில் 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி 4 விக்கெட்டுகளையும் வெறும் 5 ஓட்டங்களுக்குள் இழந்து, 206 ஓட்டங்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) 49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் வீழ்த்தித் தனது சிறந்த பந்துவீச்சுப் பதிவை எட்டினார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 190 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ஓட்டங்களையும் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மேட் ரென்ஷா (Matt Renshaw) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் அவரது இடம் தற்காலிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காயத்திலிருந்து கமேரன் கிரீன் (Cameron Green) மீண்டு வரவுள்ள நிலையில், அணியின் வரிசையில் ரென்ஷாவிற்கு எந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.




