அமெரிக்க இடைத்தேர்தல்: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஈரான் வைத்துள்ள ‘செக்’
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை இலக்கு வைக்க ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை நிறுவ ஈரான் முயன்று வருகிறது.
போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டு சென்ற இந்த நீர்வழிப் பாதையில், வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈரானின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து கணிசமாகக் குறைந்து, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் சில எண்ணெய் கப்பல்கள் இன்னமும் இந்தப் பாதையைக் கடந்து வருகின்றன.
ஈரானின் புதிய உத்தி குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட இரு அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.
இருப்பினும், தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு எதிராக சுமார் 10 நாட்களுக்கு முன்பிருந்தே வெவ்வேறு வகையான தாக்குதல் உத்திகளை ஈரான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் அத்தகைய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு, தாக்குதல்களின் வகை மற்றும் வேகத்தில் மாற்றங்களை இந்த உத்தி உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் கூறினர்.
“உலகளாவிய எண்ணெய் விலையைக் குறைப்பதற்கான அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முயற்சிகளை முறியடிப்பதே இதன் நோக்கம்” என்று அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய உத்தியை அமுல்படுத்தும் முடிவு ஈரானிய தலைமையின் மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாட்டின் ஆட்சி அதிகார அமைப்புகள் முழுவதும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




