அணு செறியூட்டல் திறனை ஈரான் குறைக்க வேண்டும்: அமெரிக்கா திட்டவட்டம்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஏழு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் Reuters) செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஈரான் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதில் வாஷிங்டனுக்குத் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா ஈடுபடுவதை தொடர்ந்து எதிர்த்து வரும் வேன்ஸ், இந்த மோதலுக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
ஜூன் மாதம் அவரே முன்னின்று நடத்திய தற்காலிக அமைதி ஒப்பந்தம் விரைவில் முறிவடைந்தது. இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி சந்தையைப் பாதித்துள்ளதுடன், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
அலாஸ்காவில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடித்த பிறகு திங்கள்கிழமை பேசிய வேன்ஸ், அணுஆயுதக் குறைப்பு தொடர்பான வெறும் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அணுச்செறிவூட்டல் திறனை ஈரான் நேரடியாகக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஈரானுக்கு அணுஆயுதம் தயாரிக்கும் எண்ணம் இல்லை என்றால், 60% செறிவூட்டப்பட்ட எரிபொருள் அவர்களுக்கு எதற்குத் தேவைப்படுகிறது? அணுஆயுதம் செய்ய மாட்டோம் என்ற உறுதிப்பாட்டைக் காட்ட விரும்பினால், உயர் செறிவூட்டப்பட்ட எரிபொருளைத் தயாரிக்கக் கூடாது. இது மிகவும் அடிப்படை விஷயம்,” என்று வேன்ஸ் கூறினார்.




