மர்ம ட்ரோன்கள் தொடர்பில் ஈரான் மீது சந்தேகம்: பிரித்தானியாவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளமான RAF லேக்கன்ஹீத்தைச் சுற்றி பறந்த சுமார் ஆறு ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் தனது எதிர் ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரட்டியடித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை Financial Times செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
இதன்போது, அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்திய எதிர் ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த விமானங்கள் விரட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றில் எதுவும் பிரித்தானிய அல்லது அமெரிக்கப் படையினரால் மீட்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்துடன் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஆளில்லா விமானங்களின் தோற்றம் அல்லது அவற்றின் நோக்கம் தொடர்பில் இதுவரை உறுதியான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த செப்டெம்பர் மாதம் பிரித்தானியாவின் RAF விமானப்படைத் தளம் தொடர்பாகவும் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவின் B-1 குண்டுவீச்சு விமானங்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரித்தானிய விமானப்படைத் தளங்கள் தொடர்பான சம்பவங்களில் தமக்குத் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.




