சீனாவை தாக்கிய டால்பின் புயல் – கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை
இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயலான டால்பின் புயல், இன்று மாலை (09) சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடைந்துள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவந்த இந்தப் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை அடைவதற்கு முன்பு, இந்தப் புயல் ஜப்பானின் தெற்கு ஒகினாவா மாகாணத்தைக் கடந்து சென்றது. அங்கு, ஆறு பேர் காயமடைந்ததாகவும், 50,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் வானிலை ஆய்வுத் துறையின்படி, டால்பின் புயல் இன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணியளவில் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள யுஹுவான் அருகே கரையைக் கடந்தது.
அது நிலத்தை நெருங்கியபோது, அதன் மையப்பகுதியில் காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 151 கிலோமீட்டராகப் பதிவு செய்யப்பட்டது.
தேசிய வானிலை மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் வாங் ஹைப்பிங், ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை ஜெஜியாங், ஷாங்காய், வடக்கு ஃபுஜியான், வடகிழக்கு ஜியாங்சி, அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜெஜியாங் மாகாணத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 250 முதல் 500 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் கிழக்குப் பிராந்தியத்தில் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.




