இம்ரான் கானின் விடுதலையைக் கோரும் மகா பேரணி ஒத்திவைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்துவதற்காக, செப்டம்பர் 27 அன்று இந்தப் பேரணியைத் தொடங்க பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிடிஐ நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வாரம், ஆதரவாளர்களின் பேரணியைக் கருத்தில் கொண்டு, தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளைக் சரக்குக் கொள்கலன்களைக் (Shipping containers) கொண்டு அடைத்தும், பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரைக் குவித்தும் பாகிஸ்தான் அரசு நகரத்திற்கான பாதைகளைக் கட்டுப்படுத்தியது.
எனினும், திட்டமிட்ட திகதியை ஒக்டோபர் 4-க்கு மாற்றியிருந்தாலும், அதற்கு முன்பாகவும் பேரணியைத் தொடங்கக்கூடும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுல்பி புகாரி ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் பேரணியைத் தொடங்க முடியும். ஆனால், இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நாட்டின் பாதைகளை மூடி வைத்திருக்க அரசு தயாராக உள்ளது என்பதுதான் கேள்வி?” என்று புகாரி கூறியுள்ளார்.
பொது அமைதியைப் பேண வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, இம்ரான் கானின் சகோதரிகள் மூவர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்களைப் பாதுகாப்புப் படையினர் கடந்த சில நாட்களில் கைது செய்துள்ளனர்.



