வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ – வர இருக்கும் மாதங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) சூழலால், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைபொழிவு அதிகரித்து வெள்ள நிலைமை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ நிகழ்வு மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகள் ஆகியவை இந்தச் சூழலுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வறண்ட வானிலை நிலவிய பகுதிகளில், குறிப்பாக செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் , இடியுடன் கூடிய மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50–55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும். சிலாபம் மற்றும் பொத்துவில் இடையே கடல் அலைகள் 2–3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




