இந்தியா மற்றும் நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை -19 பேர் உயிரிழப்பு
இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் புயல் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆற்று நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டியதால், 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேரைக் காணவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில், கடந்த 48 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், 117 வீடுகள் சேதமடைந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 63-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அங்கு இயல்பை விட 19 மடங்கு அதிக மழை பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் உள்ள நிஷி கோலா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடொன்று மண்ணில் புதையுண்டுள்ளது.
இதில் பெண், மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை நேபாளத்தில் 49 மாவட்டங்களுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரஹுகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 40 மெகாவாட் நீர்மின் திட்டத்தை சேதப்படுத்தியுள்ளது.
மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய நீர் ஆணையத்தின்படி, ஏழு மாநிலங்களில் உள்ள 30 நதி கண்காணிப்பு நிலையங்களில் நீர் மட்டம் அபாயகரமான அளவில் உள்ளது. கங்கை, கண்டக், கோசி, பாக்மதி மற்றும் நர்மதா போன்ற முக்கிய நதிகளில் எச்சரிக்கை அளவைத் தாண்டி நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.




