என்விடியா CEO பதவிக்கு 3 இந்திய வம்சாவளியினர் பெயர் பரிசீலிப்பு
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் நிரந்தர தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவிக்கு மூன்று இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாகப் பணியாற்றி வரும் சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா மற்றும் தாமஸ் குரியன் ஆகியோரின் பெயர்களே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சஞ்சய் மெஹ்ரோத்ரா மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரானின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், 1988ஆம் ஆண்டு சான்டிஸ்க் நிறுவனத்தை இணைந்து நிறுவியவர்.
நிகேஷ் அரோரா பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தாமஸ் குரியன் கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கிளவுட் உள்கட்டமைப்பு, நிறுவன மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள் உள்ளிட்ட பிரிவுகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
இவர்கள் தவிர மேலும் எட்டு பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், என்விடியா நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்சன் ஹுவாங் தொடர்பான விவகாரம் வெளியானது முதல் நேற்று வரையான காலப்பகுதியில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 490 பில்லியன் அமெரிக்க டொலர்களால் (சுமார் ரூ.47 இலட்சம் கோடி) வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் என்விடியா பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.





