இந்தியாவில் இளைஞர் போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை: மோடி அரசு மீது அடக்குமுறை குற்றச்சாட்டு
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் இளைஞர்களின் போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது.
எனினும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் போராட்டச் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. இளைஞர் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த கோடைக்காலத்தில் இளைஞர்களின் அதிருப்தி மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய நையாண்டிப் பதிவுகள் காரணமாக இந்தியாவில் புதிய போராட்ட அலை உருவானது. பிரதமர் நரேந்திர மோடியையும் வெளிப்படையாக விமர்சித்து கேலி செய்யும் அளவுக்கு இந்த இயக்கம் வலுப்பெற்றது.
ஆனால், கடந்த மாதம் வாக்குரிமை தொடர்பாக ‘கொக்குரோச் ஜனதா கட்சி’ (CJP) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், ஆயிரக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்களையும் கைது செய்தது.
போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியும் தற்போது அங்கீகரிக்கப்பட்ட போராட்ட இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
போராட்டங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இளைஞர் போராட்டங்கள் சாதி, பாலினம் அல்லது பொருளாதாரப் பின்னணி என எந்தவொரு பிரிவுக்கும் மட்டுப்படுத்தப்படாமல் பரந்துபட்ட ஆதரவைப் பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னரும் மோடி அரசாங்கம் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பல மாதங்கள் நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, அந்தச் சட்டங்களை அரசாங்கம் கைவிட்டது.
2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகளில் 53 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவருக்கு எதிரான விசாரணை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அவரது துணைவியார் பானோஜ்யோத்ஸ்னா லஹிரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய இளைஞர் போராட்டங்களிலும் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. CJP பேச்சாளர் சௌரவ் தாஸ் மற்றும் அதன் மற்றொரு தலைவர் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டனர்.
போராட்டங்களுக்கு எதிரான வழக்குகள் பலவற்றில் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் போகலாம். இருப்பினும், வழக்குகள் பல ஆண்டுகள் நீடிப்பதே போராட்டக்காரர்களை அச்சுறுத்தி போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் என சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமைதியான போராட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர் விரிந்தா குரோவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) நிராகரித்துள்ளது. போராட்ட உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தேசியப் பேச்சாளர் சையத் ஜாபர் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் இளைஞர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவர் செயற்பாட்டாளர் சாகியின் பதிவுகள் இலட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக வன்முறை மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைமையைப் போன்றதொரு அடக்குமுறை தற்போது முன்னெடுக்கப்படுவதாக CJP தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்தியாவில் அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர்களின் எதிர்ப்புக் குரல் முற்றாக முடக்கப்படவில்லை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.





