இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் படைப் பிரிவின் முக்கிய தளபதி பலி
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடத்திய முக்கிய தளபதி ஒருவர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
53 வயதான சமீர் அபு யூனிஸ் என்பவரே கொல்லப்பட்டதாகவும், அவர் ஹமாஸின் ரபா படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றியவர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அவர் சனிக்கிழமை கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த போதிலும், அவரது பெயரை வெளியிடவில்லை.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள மவாசி பகுதியில் வீதியொன்றில் சமீர் அபு யூனிஸைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1991ஆம் ஆண்டு ஹமாஸின் ஆயுதப் பிரிவில் இணைந்த சமீர் அபு யூனிஸ், ரபா பகுதியில் பல்வேறு முக்கிய இராணுவ நடவடிக்கைப் பொறுப்புகளை வகித்த பின்னர், அங்குள்ள படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கான் யூனிஸ் நகரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபரில் அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம், பாரிய மோதல்களைத் தடுத்திருந்தாலும், இஸ்ரேலிய தாக்குதல்களை முழுமையாக நிறுத்தவோ அல்லது ஹமாஸின் ஆயுதக் களைவை உறுதிப்படுத்தவோ தவறியுள்ளது.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை குறைந்தது 1,600 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே காலப்பகுதியில் ஐந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஒக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினர் தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.
இந்த இராணுவ நடவடிக்கையில் இதுவரை 74,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




