புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் இந்தியா செல்கிறார் இளவரசி கேட்
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்ற பின்னர் தனது மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, கணவர் இளவரசர் வில்லியத்துடன் இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்கிறார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இளவரசர் வில்லியம் (44), இளவரசி கேட் (44) ஆகியோர் மும்பையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வருடாந்திர ‘எர்த்ஷாட்’ (Earthshot Prize) விருது வழங்கும் விழாவும் அடங்குகிறது.
2024ஆம் ஆண்டு அடையாளம் வெளியிடப்படாத புற்றுநோய் வகைக்காக முன்னெச்சரிக்கை கீமோதெரபி சிகிச்சையைப் பெற்ற கேட், தற்போது நோயிலிருந்து மீண்டுள்ள போதிலும், அதன் தாக்கம் தனது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் இளவரசர் வில்லியம், காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில் 2020ஆம் ஆண்டு ‘எர்த்ஷாட்’ விருதை ஆரம்பித்தார்.
இதன் ஊடாகத் தெரிவு செய்யப்படும் ஐந்து வெற்றியாளர்களுக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்கப்பட்டு, அவர்களின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு உதவப்படுகிறது.
“சுற்றுச்சூழல் சவால்கள் தீவிரமானவையாக இருந்தாலும், அவற்றுக்குத் தீர்வுகாண உலகெங்கும் முன்னெடுக்கப்படும் புத்தாக்க முயற்சிகள், உறுதிப்பாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அதே அளவுக்கு வலிமையானவை என்பதை எடுத்துக்காட்டுவதே இளவரசரின் நோக்கம்” என கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட், பேஷன், சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்பு
இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும் இவ்விருது விழாவில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஆலியா பட், நடிகர் ரமி மாலெக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், பிரித்தானியாவின் பிரபல இசைக்குழுவான ‘டேக் தட்’ (Take That), முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
எர்த்ஷாட் விருது விழாவுக்கு அப்பால், இந்திய கிரிக்கெட், பேஷன் மற்றும் சினிமா துறைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரச குடும்பத் தம்பதியினர் பங்கேற்கவுள்ளனர்.
புற்றுநோய் பாதிப்புக்குப் பின்னர் இளவரசி கேட் தனது உத்தியோகபூர்வ பணிகளைக் கணிசமாகக் குறைத்திருந்தார். அவரது பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு படிப்படியாக அதிகரித்து வந்தாலும், இதற்கு முன்னர் இளவரசர் வில்லியத்துடன் எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க வெளிநாட்டுப் பயணம், கடந்த மே மாதம் இத்தாலிக்கு தனியாக இரண்டு நாட்கள் சென்றமையாகும். சிறுவயதுக் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி தொடர்பான தனது பணிகளின் ஒரு பகுதியாக அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், வில்லியம் விருந்தினர் ஆசிரியராகப் பணியாற்றிய ‘கன்ட்ரி லைப்’ (Country Life) சஞ்சிகையின் புதிய இதழில் வெளியான நேர்காணலில் தனது உடல்நிலை குறித்துப் பேசிய கேட்,
“எனது குணமடைதல் ஒரே சீராக இருக்காது என்று மருத்துவமனையில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் சிறப்பாகவும், சில நாட்கள் கடினமாகவும் இருக்கும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும்” என்று தெரிவித்துள்ளார்.




