காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!
“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல.
இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (07.05.2026) வியாழக்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட அதிதியாக உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” போரால் மிக நீண்டகாலமாகப் பேரழிவுகளைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, ‘நிலைமாறுகால நீதிப் பொறிமுறை’ என்பது மிக முக்கியமானதொரு பேசுபொருளாகும்.
ஒருவர் உயிரிழந்தால் ஏற்படும் வலியை விட, அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என்றே தெரியாமல் ‘காணாமல் ஆக்கப்படுவதால்’ ஏற்படும் வலி பல மடங்கு கொடியது.
என்றாவது ஒரு நாள் தமது உறவு வாசற்கதவைத் தட்டிவிட மாட்டார்களா என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அந்தக் குடும்பங்களின் வலியை, அவர்களைத் தவிர வேறு எவராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறை ஒருபுறம் சுயாதீனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால், அதற்குச் சமாந்தரமாக, எமது நிர்வாகக் கட்டமைப்பு இந்தக் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் ஒருகணம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக வடக்கில் செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றன.” – எனவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.





