ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)
மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது.
புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் 06 ஆம் இலக்க மேடைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சூழல் அழகுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி அனுசரணையினை அக்பர் நிறுவனம் வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், NIO Engineering நிறுவனத்தின் ஆலோசனை சேவைகளுக்கமைய ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த புனரமைப்பு பணிகள் முறையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகையிரத நிலையங்களில் ஒன்றான மருதானை புகையிரத நிலையம், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிலையமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்வதற்காக ஒன்றுகூடும் இந்த புகையிரத நிலையத்தை பல கட்டங்களின் கீழ் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.







