அமெரிக்க அரசியலில் திருப்பம்: ட்ரம்புக்கு எதிராக உருவாகும் இளம் புயல்
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களைத் தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய முக்கிய வேட்பாளராக ஜோர்ஜியா மாநில செனட்டர் ஜோன் ஒசோப் (Jon Ossoff) உருவெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளிலும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வது தொடர்பான அரசியல் நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
குடியரசுக் கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இதேவேளை, ஜனநாயகக் கட்சியில் 24க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போது ஜோன் ஒசோஃப்பின் பெயர் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
39 வயதான ஜோன் ஒசோப், அண்மைய மாதங்களில் ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தை நேரடியாகவும் கடுமையாகவும் விமர்சித்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அட்லஸ் இன்டெல் கருத்துக்கணிப்பில், 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் ஜோன் ஒசோஃப் முன்னிலை பெற்றிருந்தார். அவருக்கும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸுக்கும் இடையிலான ஆதரவு வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
அண்மைய இடைக்காலத் தேர்தலில் ஜோர்ஜியா மாநில செனட் ஆசனத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர், 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் தமக்கில்லை என ஜோன் ஒசோஃப் மறுத்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற விவாதமொன்றிலும், 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் தமக்கு எவ்வித ஆர்வமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்புக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள்
ஜோன் ஒசோப்பின் அரசியல் அணுகுமுறை ஜனநாயகக் கட்சியினரிடையே புதிய கவனத்தைப் பெற்றுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தை விமர்சிக்கும் அவரது உரைகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
குறிப்பாக, ஈரானுடனான போரைக் கையாளும் விதம், பொருளாதாரக் கொள்கைகள், வரி விதிப்புகள் மற்றும் ஜனாதிபதியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக ட்ரம்ப்பை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும், நாட்டின் வளங்களை வீணடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது உரைகள் இளம் வாக்காளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக ஊடகங்களைத் திறம்படப் பயன்படுத்தும் அரசியல்வாதியாகவும் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
ஆஸ்திரேலியத் தொடர்புகளைக் கொண்டவர்
அமெரிக்க அரசியலில் வளர்ந்து வரும் தலைவராகக் கருதப்படும் ஜோன் ஒசோப், ஆஸ்திரேலியாவுடனும் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளார்.
அவரது தாயார் ஹீதர் பென்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிறந்தவர். அவரது பாட்டி பிரிஸ்பேனையும், தாத்தா மெல்பேர்னின் புட்ஸ்க்ரே பகுதியையும் சேர்ந்தவர்கள்.
ஜோன் ஒசோப் முன்னர் ஆஸ்திரேலியக் குடியுரிமையையும் கொண்டிருந்ததாகவும், 2021ஆம் ஆண்டு அதனைத் துறந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசியலில் இளம் தலைமுறையின் வளர்ந்து வரும் தலைவராகக் கருதப்படும் ஜோன் ஒசோப், 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய போட்டியாளராக உருவெடுப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.




