அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா மார்கோ ரூபியோ? பிரான்ஸ் விரைவது ஏன்?
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி செவ்வாய்க்கிழமை பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ரூபியோ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தத் தேர்தல் முடிவுகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அமெரிக்காவின் நலன்களை முன்னெடுப்பதே ரூபியோவின் நோக்கம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூபியோ விரைவில் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவார் என வெளியான தகவல்களை அவர் வியாழக்கிழமை நிராகரித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடையும் வரை அவருடன் இணைந்து பணியாற்றுவதே தனது திட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போராட்டங்களைக் கருத்திற்கொண்டு, கடைசி நேரத்தில் மார்செய் நகரிலிருந்து பாரிஸுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




