என்.பி.பி. அரசுக்கு அக்கினிப் பரீட்சை: நடக்கப்போவது என்ன?
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சூளுரைத்துள்ளன.
குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க முக்கியஸ்தர் சமன் ரத்னபிரிய, குறித்த அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், எதிர்ப்புகளை மீறி அந்தச் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களை முடக்குவதற்கோ அல்லது தொழிற்சங்க உறுப்பினர்களைக் கைது செய்வதற்கோ அரசாங்கம் முயற்சித்தால் கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவோம் என எச்சரித்த அவர், இது ஆரம்பம் மட்டுமே என்றும், மக்கள் சக்தியைத் திரட்டி போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.




