போலி கொவிட் – 19 தடுப்பூசி: சர்ச்சையில் சிக்கிய சுவிஸ் அணி தலைவர்
போலி கோவிட்-19 (COVID-19) தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவரான கிரானிட் ஷாக்கா (Granit Xhaka) சர்வதேச பயிற்சி முகாமில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது.
தனது தவறை ஒப்புக்கொண்டு ஷாக்கா பகிரங்க அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரும் சுவிஸ் கால்பந்து சங்கத் தலைமையும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.
இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஷாக்கா, “அச்சமயத்தில் நிலவிய மன உளைச்சல் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட சூழலில், எனது சந்தேகங்களை முறையான வழியில் தெளிவுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக, போலி தடுப்பூசி சான்றிதழ் ஒன்றை நான் பெற்றேன்.
நான் தேர்ந்தெடுத்த வழி தவறானது என்பதை இன்று நான் தெளிவாக உணர்கிறேன். அது ஒரு தவறு, இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான அதிகாரிகளின் விசாரணைக்குத் தான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் 33 வயதான ஷாக்கா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் தொடரில் ‘சந்தர்லேண்ட்’ (Sunderland) அணிக்காக விளையாடி வரும் இந்த மத்தியகள வீரர், 2011 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அணியில் அறிமுகமானார்.
இதுவரை 152 சர்வதேச போட்டிகளில் விளையாடி, சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார்.
ஷாக்கா தனது தவறை உணர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டதைச் சுவிஸ் கால்பந்து சங்கத்தின் தலைவர் பீட்டர் க்னேபெல் (Peter Knaebel) வரவேற்றுள்ளார்.




