உலகின் மிக மாசடைந்த பெருநகரமானது இந்தியாவின் தலைநகரம்: பட்டாசு வெடிக்க முன்பே ஆபத்து
இந்தியத் தலைநகர் டெல்லி, உலகின் மிக அதிக காற்று மாசுபாடு கொண்ட பெருநகரமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை (07), சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir அமைப்பின் நேரடித் தரவரிசையின்படி டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
காலை 10.35 மணியளவில் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 581 ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் இந்தக் குறியீடு 285 ஆகக் காணப்பட்டது.
இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு காலை 10 மணியளவில் 363 ஆகப் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசமான’ காற்றுத் தரப் பிரிவில் உள்ளடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருப்பதால், காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இணையவழிக் கல்வியை முன்னெடுக்க இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், அலுவலகப் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பதிவான காற்று மாசுபாட்டு அளவு, தீபாவளிக்கு முந்தைய எட்டு ஆண்டுகளில் பதிவான மிக மோசமான நிலை என உள்ளூர் ஊடகங்கள் உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோள்காட்டித் தெரிவித்துள்ளன.
குளிர்காலம் ஆரம்பமாகும் காலப்பகுதியில் வட இந்தியாவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பது வருடாந்தப் பிரச்சினையாகக் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வாகனப் புகை, கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை ஆகியவற்றை வளிமண்டலத்தில் தேங்கச் செய்வதே இதற்குக் காரணமாகும்.




