சுரேஷ் சாலேயின் மருத்துவ அறிக்கையை தயாரித்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை பரிசோதித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற 10 மருத்துவர்களையும், எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றுத் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், கொழும்பு நீதிவான் பாசன் அமரசேன இந்த அழைப்பாணையை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலேயின் இதயம் வீங்கியிருந்ததாகவும், அவரது உடல்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான கருவி ஒன்றைப் பொருத்தும் சிகிச்சையை அவர் மேற்கொண்டிருந்ததாகவும், அண்மையில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சாலேயை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற 10 மருத்துவர்களையுமே, எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.




