பிரான்ஸை தொடர்ந்து பிரஸ்ஸல்ஸில் வெடித்த மாணவர் போராட்டம் – பொலிஸாருடன் மோதல்
அரசாங்க வரவு செலவுத் திட்டக் குறைப்புகளுக்கு எதிரான தேசிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பிரஸ்ஸல்ஸில் இன்று மாணவர்களுடன் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கறுப்பு உடை அணிந்து முகமூடி அணிந்திருந்த போராட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் பொலிஸாருக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். மேலும் அருகிலுள்ள சுவர்களில் பொலிஸாருக்கு எதிரான வாசகங்களை எழுதியதாக கூறப்படுகிறது.
போராட்டக்காரர்களில் சிலர், “வர்க்கத்தைப் பாதுகாக்க நான் வகுப்புகளைத் தவிர்த்தேன்” மற்றும் “கல்வி ஒரு உரிமை, சலுகை அல்ல” என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் போராட்டக் காரர்களை கண்ணீர்புகைக்குண்டுகளை வீசி களைக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் பொதுப் போக்குவரத்து மற்றும் விமானப் பயணத்தைப் பாதித்தது, அதே நேரத்தில் பல பொதுசேவை மையங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்களும் பாதிப்புக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் 13 சிறுவர்கள் உள்பட 21 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




