இணையத்தில் பாலியல் துஷ்பிரயோகம் : புதிய சட்டங்களை கொண்டுவர ஸ்டாமர் முயற்சி!
“இணையத்தில் குழந்தைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசாங்கம் வேடிக்கை பார்க்காது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடுந் தொனியில் எச்சரித்துள்ளார்.
குழந்தைகள் ஆபாசப் படங்களை அனுப்புவதையோ அல்லது பெறுவதையோ தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் சில மாதங்களுக்குள் புதிய சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற லண்டன் டெக் வீக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இங்கிலாந்தில் செயல்படும் நிறுவனங்கள், சிறார்களை உள்ளடக்கிய நிர்வாண உள்ளடக்கத்தைத் தடுக்க, சாதன அளவிலான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக ஆபாசமான படங்களை அனுப்புவதையும் பெறுவதையும் தடுக்கும் சாதனக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துமாறு, இந்த நாட்டில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்களை இன்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முன்மொழிவுகளின் கீழ், ஆப்பிள் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் இதுபோன்ற உள்ளடக்கத்தைக் கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்ட கருவிகளைச் செயல்படுத்தவோ அல்லது உருவாக்கவோ வேண்டும்” என்றார்.
அத்துடன் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்டமியற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இறுதி முயற்சியாக நிர்வாகிகள் மீது குற்றவியல் பொறுப்பைச் சுமத்தவும் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.





