“போதைப்பொருள் ஒழிப்பு” – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!
போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு இதன்போது அறிவுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் இந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டை இதன் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்தத் தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் 80% இனால் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025.10.30 ஆம் திகதி முதல் இதுவரை 5437.457 கிலோ கிராம் கஞ்சா, 1936.325 கிலோ கிராம் ஹெரோயின், 1991.414 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 271.724 கிலோ கிராம் கொக்கைன், 1,574,895 போதை மாத்திரைகள் மற்றும் 629,988 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக 168,460 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





