தடுப்புக் காவல் காலத்தை குறைக்க தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குச் சமூகத்தில் தேவையான கருத்தாடலை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பிரதான பங்கு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசத்தின் முன் இன்றிருக்கும் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு முன்நின்று செயல்படுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற ” விலகிச்செல்” செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டை குறிக்கும் சர்வ மத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இனம், மதம் மற்றும் வயது பேதமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சமூகத்தில் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய மதஸ்தளங்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்புகளுக்கும் போதைப்பொருள் ஆபத்து பரவியுள்ள விதத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பேரழிவைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள பரந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.1818.gov.lk இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

” ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட ஒரேயொரு இளைஞர் மட்டும்தான் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், 2025ஆம் ஆண்டாகும்போது நாங்கள் 1,874 பேரைக் கைது செய்துள்ளோம்.
அத்துடன், 21 வயதுக்கு மேற்பட்ட 11,737 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். இவர்களுக்குள் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 இளைஞர்கள் உள்ளனர். மேலும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பிள்ளைகளும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 பிள்ளைகளும் உள்ளனர். இதன் அர்த்தம், சிறுவர்கள் கூட இதற்குக் இரையாகியுள்ளனர் என்பதாகும். அதுமட்டுமின்றி, இருநூறுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பேராபத்து எமது முழு இளைய தலைமுறையினரையும், எமது எதிர்காலத்தையுமே பேரழிவிற்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் மீது பற்றும் அக்கறையும், இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் உள்ள எமக்கு, இதற்கு எதிராக மௌனமாக இருக்க முடியாது. எமக்கு முன்னால் உள்ள ஒரே வழி இதனைத் தோற்கடிப்பது மாத்திரமே.
இந்த அச்சுறுத்தலின் பாரதூரத்தை இந்தத் தரவுகள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி, நாங்கள் இந்த ஆண்டில் 15,282 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளோம். அதன்படி, 6,528 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 4,000 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்றுகூட அதிகாலையில் 150 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 2,598 கிலோகிராம் ஏனைய போதைப்பொருட்கள், 1,841 கிலோகிராம் ஹஷிஷ், 314 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாம் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 218 பில்லியன் ரூபாய் ஆகும். கஞ்சாவையும் சேர்த்தால் அது 224 பில்லியன் ரூபாவாகிறது. அதாவது 21,800 கோடி ரூபாவாகும். இது ஒரு வருடத்திற்கான போதைப்பொருள் சந்தையாகும். கைப்பற்றப்படாத அளவையும் சேர்த்துப் பார்த்தால், எவ்வளவு அதிக அளவிலான அழிவு ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இன்று இந்தப் பேரழிவு முழு சமூகத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் மரியாதைக்குரிய எந்த இடமும் மிஞ்சப் போவதில்லை. வழிபாட்டிற்கும் மதிப்பிற்கும் உரிய மத தலங்களுக்குள்ளும் இந்தப் பேரழிவு பரவி வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சமூகத்தை உருவாக்குவதற்காகத் தமது கால்கள் தேயும் வரை கிராமங்கள் தோறும் பயணம் செய்த நமது மகா சங்கத்தினரும் பிக்குமார்களும் கூட ஓரளவு இதில் சிக்கியுள்ளனர். மற்ற மத தலங்களுக்கும் இது பரவியுள்ளது. பொலிஸார், முப்படையினர், அரச நிறுவனங்கள் என அனைத்தும் இதற்கு இரையாகியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாரியளவில் பலவீனப்படுத்தும் உத்தேசம் எமக்குள்ளது. ஏனெனில் எமக்கு இப்போது அன்றாடம் முகங்கொடுப்பதற்குத் பயங்கரவாதச் செயற்பாடு எதுவும் கிடையாது. அந்தச் சட்டம் மிக பலவீனமான சட்டமாக மாற்றப்படும். இது தொடர்பில் கருத்தாடல் நடைபெறுகிறது. எனினும், எங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு வலுவான சட்டம் அவசியமாகவுள்ளது. இதுதான் இந்த யுகத்தில் நாட்டைப் பேரழிவிலிருந்து மீட்பதற்குத் தேவையான சட்டமாகும்.
சட்டம் அடிக்கடி மாறுகிறது. புதிய சவால்களுக்கு ஏற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் சுற்றுச்சூழல் சட்டங்கள் இருக்கவில்லை. எனினும், சுற்றுச்சூழலுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் பணமோசடியைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இருக்கவில்லை. எனினும், கருப்புப் பணம் உழைக்கப்படுவது பெரும் அச்சுறுத்தலாக மாறும்போது பணமோசடித் சட்டம் உருவாகிறது.

ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களை அழிக்கும்போது பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகப் பொதுச் சொத்துச் சட்டம் தயாரிக்கப்படுகிறது. இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அதனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் இந்த யுகத்திற்கு அவசியமாகியுள்ளது.
சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதல்ல. இன்று உருவாக்கப்படும் சட்டம் நெடுங்காலம் நிலைத்திருக்காது. சமூகத்தில் புதிய சவால்கள் வருகின்றன. சமூகத்தில் புதிய சவால்கள் வரும்போது அந்தச் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு வலுவான சட்டங்கள் அவசியமாகும்.
இவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குரிய சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தோம். அதற்காகத்தான் அரசாங்கமொன்று உள்ளது. அந்தச் சட்டங்களைக் குடிமக்களால் உருவாக்க முடியாது. அந்தச் சட்டங்களை சாதாரண நபரால் உருவாக்க முடியாது, எங்களுடைய கிராம உத்தியோகத்தரினால் அந்தச் சட்டத்தை உருவாக்க முடியாது. அந்தச் சட்டத்தை பாராளுமன்றத்திற்குத் தவிர வேறு எவருக்கும் உருவாக்க அதிகாரம் இல்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு வலுவான சட்டம் அவசியமாகவுள்ளது. அதற்கான சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு இரண்டு குழுக்கள் உள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் குழு அதில் ஒன்று. அவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை, எனினும் எமது நாட்டின் மக்களின் ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்துப் பேசும் மற்றைய குழுவுடன் கலந்துரையாட நாம் தயாராகவுள்ளோம்.
எக்காரணம் கொண்டும் நாங்கள் மக்களை அடக்குவதற்கு, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தேவை எமக்குக் கிடையாது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் ஒடுக்குவதற்காகச் சட்டம் அவசியமானது, சட்டங்களை உருவாக்குவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். உயர்நீதிமன்றத்தில் இந்தச் சட்டம் தொடர்பில் ஆராயப்பட உள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றவர்கள் மூன்று அடிப்படை விடயங்களை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கும் காலம் 72 மணித்தியாலங்களாகும். அது அதிகம் என்ற தெரிவிக்கப்படுகிறது.நாம் அதனைத் திருத்துவதற்குத் தயாராகவுள்ளோம் – 72 மணித்தியாலக் காலத்தைப் 48 மணித்தியாலங்களாகக் குறைப்போம். நாங்கள் செவிமடுக்கத் தயாராகவுள்ளோம். அடுத்து சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட பச்சை குத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பில் சட்டம் தேவையில்லை என்றால் நாங்கள் அதனை வாபஸ் பெறத் தயாராகவுள்ளோம்.

கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்படலாம் என்பதற்காக கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்க மாட்டோம். எனவே அதனையும் விலக்கிக் கொள்கிறோம். தற்போது உயர்நீதிமன்றத்தில் பிரதானமாக இந்த மூன்று விடயங்கள் தொடர்பிலே ஆராயப்படுகிறது.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.




