கஜேந்திரகுமார் எம்.பியை விளாசித்தள்ளும் ராஜபக்சவின் சகா!
தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ புலிகள் வசம் சிக்கி இருந்த 290,000 தமிழ் மக்களை இலங்கை ராணுவமே காப்பாற்றியது. மக்கள் நலன் கருதி கனரக ஆயுதங்களைக்கூட பயன்படுத்தவில்லை.
இவ்வாறு மக்களை மீட்டு அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அப்போது சிறு பிள்ளைக்கு ஒரு கப் தேநீர்கூட வாங்கிக்கொடுக்காத கஜேந்திரகுமார், தற்போது இனப்படுகொலை பற்றி கதைக்கின்றார்.
மக்களை குழப்பியே இவர்கள் அரசியல் நடத்த முற்படுகின்றனர். போர் காலத்தில் கொழும்பிலும், வெளிநாட்டிலுமே இவர்கள் வாழ்ந்தனர்.
அதேவேளை, தமிழ் டயஸ்போராக்களை திருப்திபடுத்தும் வகையிலேயே தற்போதைய அரசாங்கம் செயல்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதும், மே மாததத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதும் இதன் ஓர் அங்கம்தான்.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.





