போர்க் களமாக மாறிய ஆடுகளம்: இஸ்ரேல், அயர்லாந்து வீரர்கள் முரண்பாடு
UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) கால்பந்து தொடரின் லீக் 3, குரூப் B பிரிவில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
செர்பியாவில் உள்ள ‘டி.எஸ்.சி அரேனா’ மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற போதிலும், போட்டிக் களத்தில் இரு அணி வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கும் பதற்றமும் நிலவியது.
முன்னதாக செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அயர்லாந்து நாட்டில் வலுவான ஆதரவு அலை நிலவி வரும் நிலையில், இஸ்ரேலுடன் விளையாடுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று அயர்லாந்து வீரர்களுக்குத் தாய்நாட்டில் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
எச்சில் துப்பியதாகக் குற்றச்சாட்டு
போட்டியின் இடைவேளையின் போது, இஸ்ரேலிய வீரர் ஒருவர் அயர்லாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் டேமியன் டாய்ல் (Damien Doyle) மீது எச்சில் துப்பியதாக அயர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தும் என அயர்லாந்து தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
காசாவில் நடைபெறும் போரில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அயர்லாந்து வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர்.
மேலும், போட்டிக்கு முன் இஸ்ரேலிய வீரர்களுடன் கை குலுக்க மறுத்த அயர்லாந்து வீரர்கள், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தலையைக் குனிந்து அமைதிப் போராட்டம் நடத்தினர்.
போட்டிக் கட்டணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க அயர்லாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலியப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அயர்லாந்து வீரர் பின் அசாஸ் (Finn Azaz), மனரீதியான அழுத்தம் காரணமாக இரு போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டு ஓய்வில் வைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கள் அணி சந்தித்த அரசியல் அழுத்தங்கள் குறித்துப் பேசிய அயர்லாந்து பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்பிரிம்சன் (Heimir Hallgrimsson),
“எந்தவொரு தேசிய அணியும் இத்தகைய சூழலை எதிர்கொள்ளக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற அரசியல் பதற்றம் கொண்ட நாடுகளை ஒரே பிரிவில் சேர்க்காமல் இருக்க ஐரோப்பியக் கால்பந்து சங்கம் (UEFA) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அரசியல் முரண்பாடுகள் காரணமாக ஆர்மீனியா – அஜர்பைஜான், ஜிப்ரால்டர் – ஸ்பெயின் மற்றும் உக்ரைன் – ரஷ்யா போன்ற நாடுகள் ஒரே பிரிவில் மோதாதவாறு UEFA விதிகளை வகுத்துள்ள நிலையில், இஸ்ரேல் – அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டிகளும் அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.




