இந்தியா செய்தி

கார் ஆசையால் கல்யாணம் ரத்து: மணக்கோலத்தில் காத்திருந்த மணமகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி

கார் ஆசையால் கல்யாணம் ரத்து: மணக்கோலத்தில் காத்திருந்த மணமகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி

இந்தியா ஹரியானா மாநிலம் சோனிபட்டில், திருமணத்துக்கு கேட்ட கார் கிடைக்காததால், திருமணத்தை நிறுத்தியதாக டெல்லி காவலர் ஒருவர் மீது மணமகளின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

டெல்லி காவலரான குல்தீப் என்பவருக்கும், சுபாஷ் குமாரின் மகள் ஹீனாவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஹீனா எம்.ஏ. ஜே.பி.டி. (MA JBT) படித்தவர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், மணமகன் வீட்டார் கார் மற்றும் நகைகளை கேட்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுபாஷ் குமார் ரூ.9.5 இலட்சம் மதிப்பிலான ஹூண்டாய் ஆரா காரை முன்பதிவு செய்தார்.

ஆனால், திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக, ரூ.13 இலட்சம் மதிப்புள்ள மாருதி பிரெஸ்ஸா காரையே வாங்கித் தர வேண்டும் என மணமகன் குல்தீப் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்த காரை ரத்து செய்து, புதிய காரை வாங்குவதற்கு மணமகள் வீட்டார் முயற்சித்தனர். எனினும், குறுகிய காலத்தில் காரை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

நவம்பர் 20ஆம் திகதி மாம்சந்த் வாடிகாவில் திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. மணமகன், அவரது தாய், அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோருக்கு நகைகள் வழங்கவும் மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். இதற்கான நகைகளும் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டிருந்தன.

மேலும், திருமணத்திற்கான மரச்சாமான்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.1.32 இலட்சம் செலவிடப்பட்டிருந்தது. மொத்தமாக திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.25 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை செலவு செய்துள்ளதாக சுபாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

திருமண நாளில் ஏற்பட்ட வாக்குவாதம்

திருமண நாளன்று, சுமார் 1,200 விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், மணமகன் குல்தீப் திருமண ஊர்வலத்தில் பங்கேற்காமல், தனது தாயுடன் சாதாரண உடையில் வந்து பிரெஸ்ஸா காரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கார் ஏற்பாடு செய்யப்படாததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மணமகளின் தந்தை சுபாஷ் குமார் பொலிஸில் அளித்துள்ள புகாரில், குல்தீப் தங்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், மணமகளின் சகோதரர் சாஹிலுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

உறவினர்கள் கைகூப்பி கெஞ்சியும், மணமகன் மற்றும் அவரது தாயார் திருமணத்தை நடத்த மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், மணக்கோலத்தில் இருந்த மணமகள் திருமண மேடையில் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணமகன் தரப்பிலிருந்து சுமார் 20 முதல் 30 பேர் மட்டுமே திருமண நிகழ்வுக்கு வந்திருந்ததாகவும், மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபாஷ் குமார் தனது புகாரில் கோரியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மணமகன் தரப்பின் கருத்து இதுவரை வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி