சீன ஓபன் தொடரில் களமிறங்கும் Novak Djokovic
உடல்தகுதி பிரச்சினைகளுக்குப் பிறகு, சீன ஓபன் தொடரில் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் களம் காணும் நோவாக் ஜோகோவிச், தனது உடல்நிலை தற்போது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீன ஓபன் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், “ஆம், இதுவரை நிலைமை நன்றாகவே உள்ளது” என்று கூறினார்.
கடந்த ஆகஸ்ட் ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் முதல் சுற்றில் மரியானோ நவோனிடம் (Mariano Navone) எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிறகு 39 வயதான ஜோகோவிச் களம் காணும் முதல் தொடர் இதுவாகும்.
அந்தப் போட்டியின் போது தோள்பட்டை மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்ட அவர், போட்டியின் நடுவே உபாதைக்கு உள்ளானார்.
தற்போது உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அவர், இந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் நூனோ போர்ஜஸை (Nuno Borges) எதிர்கொள்கிறார்.
புதன்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் போட்டிக்கு முன்பாகப் பேசிய அவர், “பயிற்சி ஆட்டங்கள் அல்லது பயிற்சி வகுப்புகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அதிகாரப்பூர்வ போட்டியில் விளையாடுவது முற்றிலும் வேறுபட்டது என்பது தெளிவு” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இதுவரை எல்லாம் நன்றாக உள்ளது. எப்போதும் போல சீனாவுக்கு வருவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.
சீன மண்ணில் எனது சாதனைப் பதிவுகளே எனது திறமைக்குச் சான்றாகும். அதை அறிவது எனக்குத் தேவையான நம்பிக்கையைத் தருகிறது” என்றும் கூறினார்.
“மொத்தத்தில், எனது உடல்நிலை, நான் உணரும் விதம் மற்றும் விளையாடும் முறை ஆகியவை இதுவரை சிறப்பாகவே உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் உலக முதன்மை ஆட்டக்காரரான ஜோகோவிச் பெய்ஜிங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஆவார்.
இங்கு 2009, 2010, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற அவர், இந்த ஏடிபி 500 (ATP 500) தொடரில் 29-0 என்ற தோல்வியற்ற சாதனைப் பதிவை வைத்துள்ளார்.
25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியே ஜோகோவிச்சின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.
இதன்காரணமாகவே, சமீபத்திய ஆண்டுகளில் அவர் போட்டிகளில் பங்கேற்பதைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.




