இலங்கை, இந்தியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் இன்று (11) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இந்த ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க ஆகியோருக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
இந்தியாவின் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2016 ஜூலை மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சுவசெரிய சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 88 ஆம்புலன்ஸ்கள், ஒரு வருடத்துக்கான இயக்கச் செலவுகள் மற்றும் அவசர அழைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் மையம் ஆகியன வழங்கப்பட்டன.
பின்னர், 2018 ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இந்தச் சேவை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக இந்தியா மேலும் 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதுடன், 209 ஆம்புலன்ஸ்கள், அவற்றின் இயக்கச் செலவுகள் மற்றும் பயிற்சிச் செலவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.




