காஷ்மீரில் படையினர் மீது தாக்குதல்: சுற்றிவளைப்பு ஆரம்பம்
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குல்காம் மாவட்டத்தின் மிர் பஜார் அருகிலுள்ள அக்ரான் பகுதியில் இன்று (11) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படையினரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த படையினர் சிகிச்சைக்காக அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து குறித்த பகுதியைச் சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர், தாக்குதலாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இதுவரை எந்தவொரு ஆயுதக் குழுவும் அறிக்கை வெளியிடவில்லை.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில இந்திய ஊடகங்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று எனவும் தெரிவித்துள்ளன.




