ஐ.நா. சபை மறுசீரமைக்கப்பட வேண்டும்: இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்து
அதிகரித்து வரும் மோதல்கள், வர்த்தகக் தடைகள், பாதுகாப்பு வாதம் (Protectionism) மற்றும் அதிகார அரசியல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பல்வேறு தரப்பு உறவுகளைப் பாதுகாக்கவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் அமைதிக்கான கூட்டுப் பொறுப்பை உறுதிசெய்யவும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அறிவிக்கப்பட்ட ‘பல்வேறு தரப்பு உறவுகளுக்கான பங்காளிகள்’ (Partners for Multilateralism – P4M) எனும் புதிய முன்முயற்சியின் கீழ், இந்நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
வளர்ந்து வரும் உலகளாவிய பிரிவினைகளுக்கு மத்தியில், நடுத்தர வல்லரசு நாடுகளின் (middle powers) ஒத்துழைப்பு மூலம் சர்வதேச அமைப்புகளை மேலும் “பிரதிநிதித்துவமிக்கதாகவும், திறம்பட செயல்படக்கூடியதாகவும், நம்பகமானதாகவும்” மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சர்வதேச சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள் துல்லியமாகப் பின்பற்றப்படும் போதே பல்வேறு தரப்பு உறவுகள் சிறப்பான பலனைத் தரும்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், விநியோகச் சங்கிலி முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, வணிகச் சார்ந்த முதலீடுகளைப் பல்வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் சர்வதேசப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அவசர கால நிதி உதவி ஆகிய அனைத்து உலகளாவிய விவகாரங்களும் நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு மனப்பான்மையிலேயே தங்கியுள்ளன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அதிகார அரசியல் கவலை
பொருளாதாரச் சார்ந்திருப்பைப் பலவந்தமான நெம்புகோலாகப் பயன்படுத்தி, சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் போக்கிற்கு இந்நாடுகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.
ஐநா மறுசீரமைப்பு
ஐக்கிய நாடுகள் சபை (UN) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை தற்போதைய பன்முகத்தன்மை கொண்ட உலகச் சூழலுக்கு ஏற்ப மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
G7 மற்றும் BRICS-க்கு மாற்றான பாலம்
ஜி7 (G7) அல்லது பிரிக்ஸ் (BRICS) போன்ற பிரத்தியேகக் கூட்டமைப்புகளைப் போலன்றி, வளர்ந்த மேலைநாடுகளுக்கும் தெற்குலக நாடுகளுக்கும் (Global South) இடையே பாலமாக இந்த அமைப்பு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




