குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை நிறுவ நிதி எங்கே இருந்து வந்தது? TID விசாரணை
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவதற்கு முயற்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஷிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள தமது அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த நீண்ட விசாரணையின்போது, அந்தச் சிலை நிறுவுவதற்கான நிதி மற்றும் அதற்கான மூலங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பிலேயே தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரியவருகின்றது.
முன்னதாக வல்வெட்டித்துறையிலுள்ள கந்தசாமி சதீஷின் வீட்டுக்கே நேரில் சென்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது தடவையாகவும் அவரை யாழ். அலுவலகத்துக்கு அழைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




