இறுதி அமர்வு நிறைவு: நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒக்டோபர் 1 கலைப்பு
எதிர்வரும் நவம்பர் 7-ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் இறுதிக்கட்ட அமர்வு புதன்கிழமை (23) நிறைவடைந்தது.
தேர்தல் களம் மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிறைவு விவாதத்தின் போது அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்களைக் கவரும் வகையில் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.
பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) தனது மையம்-வலதுசாரி (centre-right) கூட்டணி அரசாங்கத்தின் சாதனைகளைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிய அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவரான கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins), மூன்று ஆண்டுகால ஆட்சியில் அரசாங்கம் தனது முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது எனக் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய இறுதி உரையில் பிரதமர் லக்ஸன், “இந்த அரசாங்கம் சாதித்துள்ளவை குறித்து நான் அளப்பரிய பெருமை கொள்கிறேன்,” என்று கூறினார்.
பொருளாதார வளர்ச்சி, சாதனை அளவிலான ஏற்றுமதி மற்றும் குறைந்தளவு அரசாங்கக் கடன் ஆகியவற்றைத் தனது கூட்டணி அரசாங்கத்தின் முக்கியச் சாதனைகளாக அவர் பட்டியலிட்டார்.
“தேர்தலில் நாம் சரியான முடிவை எடுத்தால், இன்னும் பல சாதனைகளை எட்டக்கூடிய அபார ஆற்றல் கொண்ட உலகின் மிகச்சிறந்த நாடு இதுவென்பதை நேஷனல் கட்சி (National Party) நன்றாக அறியும்,” எனக் குறிப்பிட்ட அவர், இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைக் கோரினார்.
கருத்துக் கணிப்புகளின்படி, ஆளும் மையம்-வலதுசாரி கூட்டணிக்கோ அல்லது இடதுசாரி கட்சிகளுக்கோ நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் அறுதியாகத் தெரியவில்லை என்பதால், இத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனக் கருதப்படுகிறது.
ஒக்டோபர் 1-ஆம் திகதி நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு முந்தைய அதிகாரப்பூர்வப் பிரச்சாரக் காலம் தொடங்கவுள்ளது




