இரட்டைக் குடியுரிமை குறித்து இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்கு கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடியுரிமை’ (Global Sri Lankan Heritage Citizen) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்கு உரிய கட்டணங்கள் இன்றி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரிடம் காணப்படும் அறிவு, திறமை மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்தியுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இளம் தலைமுறையினருக்கும் அவர்களின் பூர்வீகத் தாய்நாடான இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கான தகைமை விதிமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






