45 வயதைக் கடந்தும் கிரிக்கெட்டில் தொடரும் இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2027ஆம் பருவத்துக்காக சர்ரே (Surrey) அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையாளரான 44 வயதுடைய ஆண்டர்சன், கடந்த 25 ஆண்டுகளாக விளையாடி வந்த லங்காஷயர் அணியால் புதிய ஒப்பந்தம் வழங்கப்படாத நிலையில், சர்ரே அணியில் இணைந்துள்ளார்.
2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 45 வயதை எட்டவுள்ள அவர், தனது கிரிக்கெட் பயணம் அடுத்த ஆண்டுடனும் முடிவடைய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 991 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து வீரர்களில் முதலிடத்திலும், வேகப்பந்து வீச்சாளர்களில் உலக சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தொடர்ந்து லங்காஷயர் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டில் அந்த அணிக்குத் தலைமை தாங்கியதுடன், 50 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
எனினும், அணியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆண்டர்சனை விடுவிக்க லங்காஷயர் நிர்வாகம் தீர்மானித்தது.
சர்ரே அணியுடனான ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஆண்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், களத்தில் இன்னும் சாதிக்க வேண்டியவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ரே அணியுடன் இணைந்து சம்பியன் பட்டங்களை வெல்லும் இலக்கில் பங்களிப்புச் செய்ய ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ரே அணி 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கவுண்டி சம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




