RAF Fairford சம்பவம்: கைதான ஐவரும் பிணையில் விடுப்பு- தொடரும் விசாரணை
பிரித்தானியாவிலுள்ள RAF Fairford அமெரிக்க விமானத் தளத்திற்கு அருகே பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பொலிஸ் பிணையில் (Police bail) விடுவிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் (CTP) தலைவர் லாரன்ஸ் டெய்லர் (Laurence Taylor) தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் நடமாடுவதற்கும் பிறருடன் தொடர்பு கொள்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், பின்னர் பயங்கரவாதச் செயலுக்குத் தயாரானார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் பயணித்த மூன்று வாகனங்களும் இராணுவ மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் பொலிஸாரின் நடமாட்டத்தைக் குறைத்து, வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு விரைவாக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தின் பின்னணியில் புவிசார் அரசியல் சூழல் (Geopolitical context) ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




