அமெரிக்க நடிகையின் ஆபாச விளம்பரத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு
அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney) நடித்துள்ள புதிய விளம்பரப் பிரச்சாரம் ஒன்று, விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாக ஆபாசமாகச் சித்தரிப்பதாகக் கூறி பெண் விளையாட்டு வீராங்கனைகள் இடையே பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
‘நோவிக்’ (Novig) என்ற விளையாட்டு கணிப்பு தளத்திற்கான (sports prediction market platform) விளம்பரத்தில், நடிகை சிட்னி ஸ்வீனி மிகக் குறைவான உடைகளுடன் தோன்றி, தனது உடலின் சில பகுதிகளைக் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு மறைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த விளம்பரம் பெண்களுக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி பல பெண் வீராங்கனைகள் சமூக வலைதளங்களில் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நான்கு முறை ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை அரியார்னே டிட்மஸ் (Ariarne Titmus) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது எனக்குள் ஏற்படும் கோபத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு பெண்ணின் உடலைப் பணமாக்குவதும், பெண் விளையாட்டுகளை ஆபாசப்படுத்துவதும் இன்னும் தொடரும் உலகத்திலா நாம் வாழ்கிறோம்?” என்று கொதிப்புடன் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான கிரேசி கிராமர் (Gracie Kramer) இச்செயலை மிகவும் கோபமூட்டும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில் பெண்களின் சாதனைகளை விடுத்து, அவர்களின் உடலை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற விளம்பரங்கள் சர்வதேச அளவில் விளையாட்டு வீராங்கனைகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.




